பழைய சிகிச்சை முறையை கையில் எடுக்கும் அமெரிக்கா..!! கொரோனாவை குணமாக்க புதிய வழிமுறை..!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால், இதனைக் கட்டுப்படுத்த எந்த வித சரியான மருந்தும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்கா நாடு தற்போது கொரோனாவை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை முறையை கையில் எடுத்து இருக்கிறது.

அதில், கொரோனாவால் ஏற்கனவே குணம் பெற்றவரின் பிளாஸ்மாவை பெற்று அதைத் தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சை முறை எனப்படுகிறது.குணமடைந்தவர்களின் பிளாஸ்மாக்களில் உள்ள இம்யூனோகுளோபின்கள் வைரஸை எதிர்த்து போராடி வெற்றி அடைந்திருக்கும். இதனால் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு அந்த பிளாஸ்மாவை செலுத்தும் போது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து குணமடைய வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகளும் இந்த சிகிச்சை முறை குறித்து நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.1918-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலின் போதும் குணமடைந்தவர்களிடமிருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரத்த மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

அம்மை போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன் இதுபோன்ற சிகிச்சை முறையே நடைமுறையில் இருந்துள்ளது. இதனால் இந்த சிகிச்சை முறையின் பக்கம் தற்போது அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ளது.இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அமெரிக்காவின் பல்வேறு சுகாதார நிறுவனங்களும் இதை பயன்படுத்தி பார்க்கலாம் என ஆலோசனை வழங்கி இருக்கின்றன.அதே நேரம் அமெரிக்காவில் கொரோனாவை எதிர்த்து குணமடைந்த பலரும் தங்களுடைய ரத்த பிளாஸ்மாக்களை தானமாக தருவதற்கு முன்வந்துள்ளனர்.இதனால், இது தொடர்பான முதற்கட்ட ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அமெரிக்காவில் இந்த சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.