தினமும் 3 முறைக்கு மேல் இதை செய்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்..!

ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல், பல் துலக்கினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் 10 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறையும் என ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் 40 முதல் 79 வயதுக்குட்பட்ட 161,000 பேரின் வாய்வழி சுகாதாரம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆய்வு செய்தனர். ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் 2003 மற்றும் 2004க்கு இடையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டவர்கள் ஆவார்கள். ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-அடிக்கடி பல் துலக்குவதால் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் வாழும் பாக்டீரியாக்கள் குறைந்து அவை இரத்த ஓட்டத்தில் நுழைவதைத் தடுக்கிறது. இதய செயலிழப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும் நிலை ஆகியவற்றை குறைக்கிறது.

ஆய்வில், 5 சதவிகிதத்தினர் இதய செயலிழப்பு மற்றும் மூன்று சதவிகிதம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ளனர்.ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பல் துலக்குபவர்களுக்கு இதய செயலிழப்பு ஆபத்து 12 சதவீதம் குறைந்து உள்ளது. ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆபத்து 10 சதவீதம் குறைந்து உள்ளது.மோசமான வாய்வழி சுகாதாரம், ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை அதிகரிக்க வழிவகுக்கிறது, உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது ஒழுங்கற்ற துடிப்பு மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்தை பம்ப் செய்ய அல்லது ரத்தத்தை நிரப்பும் இதயத்தின் செயல் திறன் பலவீனமடைகிறது என கூறபட்டு உள்ளது.இந்த ஆய்வின் முடிவு, ஐரோப்பிய இருதயவியல் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது