தனிமைப்படுத்தப்பட வேண்டிய வெளிநாட்டவர்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டில் மூன்று ஹோட்டல்களின் உரிமையாளர்கள் கைது!!

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய 7 வெளிநாட்டவர்கள் தலைமறைவாகி இருந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.திருகோணமலை – நிலாவெளி சுற்றுலா வலய பகுதியில் உள்ள மூன்று ஹோட்டல்களில் இந்த வெளிநாட்டவர்கள் மறைந்து இருந்துள்ளனர்.
இந்தத் தகவலை மறைத்த மூன்று ஹோட்டல்களினதும் உரிமையாளர்களை நேற்றிரவு உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.உப்புவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கயான் பிரசன்னவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருகோணமலை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தயந்த விஜய ஸ்ரீயின் ஆலோசனைக்கு அமைய பொலிஸார் இந்த ஹோட்டல்களை சுற்றிவளைத்துள்ளனர்.

இதனடிப்படையில், ஹோட்டல்களில் இருந்த இரண்டு அமெரிக்க பிரஜைகள், இரண்டு சீனப் பிரஜைகள், ஒரு பின்லாந்து பிரஜை, ஸ்கொட்லாந்து மற்றும் பிரித்தானிய பிரஜைகள் உட்பட ஏழு பேரையும் ஹோட்டல்களிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உப்புவெளி பொலிஸார் உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் இந்த வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு வெளிநாட்டவருக்கு விசா அனுமதி கலாவதியாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த வெளிநாட்டவர்கள், யாழ்ப்பாணம், ஹபரணை, அனுராதபுரம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு பயணம் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அதேவேளை கைது செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன் அவர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.