முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கடும் எதிர்ப்பினால் பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கினை நிர்மாணிக்கும் திட்டத்தை கைவிட்டது இலங்கை அரசு..!!

ஹோமகமவில் பிரம்மாண்ட கிரிக்கெட் அரங்கினை நிர்மாணிக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள், இன்னாள் அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு முன் கொரோனாவிற்கு பின்னரான புதிய சவால்களைக் கருத்தில் கொள்ள முடிவு செய்யப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

முன்னர் வந்த செய்தி…

40 மில்லியன் டொலர் செலவில் அமையும் புதிய கிரிக்கெட் மைதானம் குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று ஹோமாகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது.இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் கட்டுமானம் தொடருமா என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.