முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவானது, இவ்வருடம் மட்டுப்படுத்தப்பட்ட 72 பேருடன், சம்பிரதாய பூசை வழிபாடுகள் மாத்திரம் இடம்பெறும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இம்முறை பொங்கல் விழாவிற்கு, பொதுமக்கள் செல்வதற்கு முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் விழா தொடர்பாக நேற்று(புதன்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லை மாவட்டசெயலாளர் க.விமலநாதன், பொங்கல் நடவடிக்கைகளில் முதலாவதாக பாக்குத் தெண்டல் இடம்பெறும்.குறித்த பாக்குத்தெண்டல் நிகழ்வானது எதிர்வரும் 25ஆம் திகதி (திங்கள்) அன்று அதிகாலை இடம்பெறும். பாக்குத் தெண்டல் நிகழ்வானது ஊரடங்கு வேளையில் இடம்பெறுவதனால், உரிய அனுமதிகள் பொலிஸாரிடம் முன்னரே பெறப்படவேண்டும்.

குறிப்பாக மூன்றுபேர் ஒன்பது வீடுகளுக்குச் சென்று பாக்குத்தெண்டல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தீர்த்தம் எடுப்பதற்காக காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து மாலை 02.30 மணியளவில், சிலாவத்தை தீர்த்தக்கரைப் பகுதிக்கு செல்வார்கள்.

தீர்த்த உற்சவத்தில் மக்கள் எந்த விதத்திலும் கலந்துகொள்ள முடியாதவாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காட்டாவிநாயகர் ஆலயத்தைச் சார்ந்தோர் மற்றும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத் தினைச் சார்ந்தோருமாக தீர்த்தம் எடுப்பதற்குரிய 30பேர் மாத்திரம் வீதியால் சென்று தீர்த்தம் எடுப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.வேறு எவரும் அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதிகள் வழங்கப்படமாட்டாது. தீர்த்தம் எடுத்து வரும்போது மாத்திரம் மக்கள் தத்தமது வீடுகளுக்கு முன்பாக நிறைகுடம் வைப்பதற்கும் தேங்காய் உடைப்பதற்குமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது

வழமைபோன்று அதிகளவான தேங்காய்கள் உடைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு தேங்காய் மாத்திரம் உடைக்க முடியும்.வீட்டு வாயிலுக்கு முன்பாக மாத்திரமே தேங்காய் உடைத்து நிறைகுடம் வைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களிலோ வீதிகளிலோ சந்திகளிலோ தேங்காய் உடைக்கவோ, நிறைகுடங்கள் வைப்பதற்கோ அனுமதியில்லை.

முதலாந்திகதி இரவு வேளையில் தீர்த்தமானது முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்திற்கு எடுத்து வரப்படும். அதனைத் தொடர்ந்து முதலாம் திகதியிலிருந்து ஏழாம் திகதி வரையும் முள்ளிவளை காட்டவிநாயகர் ஆலயத்தில் வெளிநபர்களுடைய தலையீடுகள் இல்லாமல் நிர்வாகத்தினரின் பங்குபற்றுதலுடன் பூசை நடவடிக்கைகள் இடம்பெறும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது“ எனத் தெரிவித்துள்ளார்.