கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அரசாங்கத்திற்கு தாதியர் சங்கத் தலைவர் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை..!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்து வரும் ஒருசில நடவடிக்கைகள் தொற்றை மேலும் வளரவிடுவதற்கே வழிகாட்டலாக அமைந்து விடும் என்று அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். உயிரைப் பணயம் வைத்து தாதியர்களும் மருத்துவர்களும் சேவை செய்து வரும் நிலையில் அவர்களுக்கான முறையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் தவறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,பேருந்தில் பயணித்தவர்கள் அதிகம் என்பதால் கேகாலையிலிருந்து கண்டிக்கு சென்ற பேருந்து பேராதனை பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு, அனைவரையும் கீழே இறக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்து கண்டி வைத்தியசாலை தாதியர்கள் உட்பட பணியாட்களை அனுப்பிவைத்துள்ளனர்.சிறிமாவோ சிறுவர் வைத்தியசாலை, பேராதனை வைத்தியசாலையைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகள், தாதியர்கள் பேராதனை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து வைத்தியசாலை வரை நடைபயணமாக சென்றுள்ளனர். பொலிஸார் தத்தமது கடமைகளை செய்து வருவது நியாயம்தான்.ஆனாலும், இன்று கொரொனா வைரஸைக் கட்டுப்படுத்த உயிரைப் பணயம் வைத்து போராடி வருகின்ற மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு பணிசெய்ய வெறுப்புநிலை ஏற்பட்டுள்ளது.இன்று அவர்களுக்கு போக்குவரத்துப் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. மாதத்திற்கு அல்லது தினமும் முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் அவர்கள் பணம் விரயம் செய்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. முறையான போக்குவரத்து வசதிகள் மற்றும் வாகனங்கள் இல்லாததினால், பலமணிநேரம் பஸ் தரிப்பிடத்திலேயே நிற்கின்ற சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளன.நிலுவைக் கொடுப்பனவுகள் கூட இன்னும் வழங்கிவைக்கப்படவில்லை. இதுகுறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் பேச்சு நடத்திய போதிலும் அவரால் வழங்கப்படுகின்ற உத்தரவுகள் மற்றும் பணிப்புரைகளை அதிகாரிகள் முறையாக அமுல்படுத்துவதில்லை.இப்படியிருக்கையில் ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் முழுமையாகக் கட்டுப்படுத்திவிட முடியுமா? இது மிகப்பெரிய சவாலாக எதிர்வரும் நாட்களில் மாறிவிடும் அபாயமும் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.