14 நாள் அவகாசத்தின் பின்பே யாழில் வெளிப்பட்ட நோயாளர்கள்…. பொதுமக்களிற்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய நிர்ணயிக்கப்பட்ட 14 நாள் காலஅவகாசத்தில் பின்னரே, யாழில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் நேற்று (1) மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுவிஸிலிருந்து வந்த போதகர் சற்குணத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மூவருக்கு தொற்று உறுதியானது.சுவிஸ் போதகர் கடந்த 15ஆம் திகதியே யாழிலிருந்து வெளியேறி விட்டார்.
போதகருடன் 15ஆம் திகதி வரை தொடர்பில் இருந்தவர்களே பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுவிஸ் போதகருடன் இறுதியாக அவர்கள் தொடர்பு கொண்ட 17 ஆம் நாளிலேயே அவர்கள் பலாலியில் பரிசோதிக்கப்பட்டனர். பரிசோதனை வரை அவர்களில் கொரோனா தொற்று இருப்பதற்கான எந்த அறிகுறியையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று இருப்பது தெரிய வந்தது.இதேபோல, நேற்று கொரோனாவினால் இலங்கையில் 3வது உயிரிழப்பு நேற்று பதிவாகியது. அவருக்கும் நோய் அறிகுறி தென்படவில்லை, நேற்று திடீரென உடல்நிலை மோசமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.இதேபோல, சில தினங்களின் முன்னர் உயிரிழந்த இரண்டாவது நோயாளியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிதுநேரத்திலேயே உயிரிழந்தார்.

இதனால், நோய் அறிகுறிகள் வெளிப்படுத்தாமல் தொற்று நீடிக்க வாய்ப்புள்ளதா என சுகாதாரத்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.இந்த அபாயங்களிலிருந்து தப்பிக்க, வீடுகளை விட்டு வெளியேறாமல், கூட்டம் கூடாமல்- சமூக இடைவெளியை பேணினாலே போதுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகிறார்கள். கொரோனா பற்றிய செய்திகளை அதிகம் படித்து, தேவையற்ற மனப்பீதி கொள்ளாமல்- அதேவேளை, சந்தேகங்கள் இருந்தால் தொலைபேசி வழியாக சுகதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை அறிவித்து, பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.