மட்டக்களப்பு பகுதியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து தங்க ஆபரணம் மற்றும் பணம் கொள்ளை

மட்டக்களப்பு – கல்லடி டச்பார் வீதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றின் கூரை ஒன்றைக் கழற்றி அங்கிருந்த 21 பவுண் தங்க ஆபரணங்கள் 70 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையர்களால் நேற்று(23) கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த வீட்டைச் சேர்ந்த உரிமையாளர் தனது மகனின் பட்டமளிப்பு விழாவிற்காகக் கடந்த 21 ம் திகதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பமாகக் கண்டிக்குச் சென்றுள்ளனர்.

நேற்று (23) வீட்டிற்கு திரும்பி வந்து கதவைத் திறந்தபோது வீட்டின் கூரைஓட்டை கழற்றி உள் நுழைந்த கொள்ளையர்கள் அலமாரியிலிருந்த 21 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் இன்று (24) அம்பாறையிலிருந்து மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு தடயவியல் பிரிவு பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.