யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று! வைத்தியர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள அவசர கோரிக்கை

யாழில் கொரோனா தொற்றிற்குள்ளான மேலும் இருவர் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நேற்று முந்தினம் (30) மட்டும் இலங்கையில் 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் மொத்தமாக தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 143 ஆக அதிகரித்திருந்தது.இந்நிலையில், நேற்று (1) மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர். இதனால், கொரோனா தொற்றுள்ளவர்வர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்தது.

யாழ்ப்பாணம், மருதானை மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.இதேவேளை சற்று முன்னர் வெளியாகிய தகவலின்படி மேலும் இருவர் யாழில் கொரோனா தொற்றுள்ளவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணி்க்கை 148 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா நோயாளிகள் 148 பேரில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நால்வருமே சுவிஸில் இருந்து வந்த பாஸ்டருடன் தொடர்பை பேணியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளதாவது;

இன்று பலாலி பகுதியில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் தொற்றே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.ஆகவே இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்கும் தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். இம்மூவரும் குறிப்பிட்ட போதகரோடு நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்.ஆகவே கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான குணங்குறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.ஆகவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அமைச்சினதும் அரசாங்கத்தினதும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.