மலையகத்தில் தொடரும் கடும் மழை…சரிந்து வீழ்ந்த பாரிய மண்மேடு…!! போக்குவரத்து முடக்கம்..!ஆலயங்கள் வீதிகள் வெள்ளத்தில்..!

மஸ்கெலியா பகுதியில் கன மழை பெய்து வருவதால் அட்டன் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.


இதன்காரணமாக அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.அத்தோடு சாமிமலை மஸ்கெலியா பிரதான வீதியின் சென்.ஜோசப் பாடசாலைக்கு அருகில் கழிவு நீர் செல்லும் கால்வாய் தாழ் இறங்கியுள்ளது.

மேலும், சாமிமலை ஓயாவுடன் காட்டாறு சங்கமிக்கும் பகுதியில் அதிகளவான நீர் வெளியேறுவதால் கவரவில 10 ஆம் இலக்க பகுதி, சாமிமலை கொலனி மற்றும் பாக்ரோ பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதில், 10 ஆம் இலக்கப்பகுதியில் தோட்ட ஆலயம் மற்றும் குடியிருப்பு பகுதியும் நீரில் மூழ்கியுள்ளது.

சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள், தோட்ட அதிகாரிகள் மற்றும் கிராம சேகவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களை அயலவர்கள் வீடுகளில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதேவேளை, மஸ்கெலியா மவுசாகலை, காசல்ரி, நோட்டன் விமலசுரேந்திர, மேல்கொத்மலை நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வருதனால் கரையோர பகுதியிலுள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சாமிமலை, கவரவில தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு பாடசாலை கட்டிட தொகுதி மற்றும் அதன் அருகில் உள்ள குடியிருப்புகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குறித்த பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.இந்த நிலையில், பிரதான வீதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை அகற்ற வீதி போக்குவரத்து அதிகார சபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.