இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி; டொலரின் விலையும் அதிகரிப்பு!

இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதிகரிப்பு என்பனவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் தனிநபர் கடனானது சுமார் எட்டு லட்ச ரூபாவாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துத் துறைகளும் சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும், நாட்டின் வெளிநாட்டுக் கடன் 17.2 டிரில்லியனாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1970ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க பதவியேற்ற போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 9 ரூபாவாக காணப்பட்டதாகவும், 1977ஆம் ஆண்டளவில் அதன் பெறுமதி 7 ரூபாவாக குறைந்ததாகவும், 1977ஆம் ஆண்டு முதல் அனைத்து அரச தலைவர்களாலும் அரசாங்கங்களாலும் வெளிநாட்டுக் கடனைக் குறைக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலரின் மதிப்பு 200 முதல் 240 ரூபாய் வரை உள்ளதால், நாட்டின் டொலர் கையிருப்பு வேகமாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலை நாட்டில் எதிர்காலத்திலும் தொடரலாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.