நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை!

சிறிலங்கா அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பில் சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான மூடிஸ் நிறுவனம் (Moodys) அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிவாரணத் திட்டங்களினால் இலங்கையின் நிதி நிலைமை மேலும் மேலும் உக்கிரமடையும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 3ம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) சுமார் 229 பில்லியன் ரூபா பெறுமதியான நிதி நிவாரண திட்டங்களை மக்களுக்கு அறிவித்திருந்தார்.

இந்த நிவாரணத் திட்டங்களினால் மேலதிகமாக நிதி திரட்ட நேரிடும் அல்லது பணத்தை மேலும் அச்சிட நேரிடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளினால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.