கோட்டாபயவுக்கு எதிராக மைத்திரி பதிலடி

கொரோனாவால் இழந்துபோன இரண்டு வரடங்களை நீடிக்க பொதுஜன வாக்கெடுப்பை நடத்துமாறு இளைஞர் ஒருவர் தன்னிடம் கோரியதாக அரச தலைவர் கோட்டாபய(Gotabaya) தெரிவித்த கருத்துக்கு முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithiripala Sirisena)) பதிலடி கொடுத்துள்ளார்.

இதன்படி பொதுசன வாக்கெடுப்பினூடாக ஆட்சிக்காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்குமாயின் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சம்மேளனத்தில் இன்று(09) கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை காட்டிலும், 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் எமது அரசாங்கத்தில் குறைவாக வழங்கினோம். உலகளவில் எரிபொருட்களின் விலை அதிகரித்த போதிலும், 2 ரூபாவினால் நாட்டில் எரிபொருள் விலையினை குறைத்து வழங்கினோம். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் எதிர்த்தனர்.

ஆனால் தற்போது நாட்டின் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. எனவே பொதுசன வாக்கெடுப்பினூடாக அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை நீடிக்க முடியாது என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.