வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட முக்கிய புள்ளி பொலிஸாரால் கைது!

கோப்பாய் மற்றும் கொக்குவிலில் வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 26 வயதுடை்ய கொலின் என்ற சந்தேக நபரே கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

சந்தேக நபரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் கூறினர்.

கடந்த நவம்பர் 23ஆம் திகதி கோப்பாய் மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்தது.

சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.