தடுப்பூசி அட்டை கட்டாயமாக்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

சிறிலங்காவில் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்த முடியாத போதிலும், பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியுமென சிறிலங்கா சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர், அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டையைக் கொண்டு செல்வதை கட்டாயமாக்கும் செயற்பாட்டுக்கான தொழிநுட்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய கியு.ஆர் குறியீடு மற்றும் செயலி ஆகியவற்றை கையடக்க தொலைபேசியில் பதிவிறக்கம் செய்வதற்கான தொழிநுட்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியாத போதிலும், பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உலகின் பல நாடுகளும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. மக்களை அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்காக இது சாதகமான நடைமுறையாக அமையும்.

உலகளாவிய ரீதியில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள நான்கு சிறந்த நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது. சுமார் 43 மில்லியன் தடுப்பூசிகள் இதுவரையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார சேவையினர் வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கள் மதிப்பிற்குரியது. பிரதேசமட்டத்தில் மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்கு பொது சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். எனவே தொடர்ந்தும் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.