பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு இலங்கைக்கு பாராட்டு தெரிவித்த ஐக்கிய நாடுகள்!

நாட்டின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

இன்று (04-01-2022) ஜனாதிபதி அலுவலகத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கனி விக்னராஜாவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில்,  இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், கனி விக்னராஜா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் உதவி நிர்வாகி மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளராகவும் செயற்படுகிறார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, 2021 பேண்தகு அபிவிருத்தி அறிக்கையின்படி இலங்கை மேலும் ஏழு புள்ளிகளைப் பெற்று, 165 நாடுகளில் 87ஆவது இடத்தைப் பெற்றுள்ளதென, விக்னராஜா சுட்டிக்காட்டினார்.

இந்நிலைமையை மேலும் மேம்படுத்தி, பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார பாதிப்புகள் தொடர்பில் உரையாற்றும் போது, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

‘காலநிலை மாற்றத்துக்கு நிலையான தீர்வுகளுடன் கூடிய பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதிச் செயலணி மற்றும் ‘பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான செயலணி உள்ளிட்ட முறையான கட்டமைப்பு ஒன்று இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதென, ஜனாதிபதி தெரிவித்தார்.

இச் சந்திப்பில், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரொபர்ட் ஜுஹ்காம், பிரதி வதிவிடப் பிரதிநிதி மாலின் ஹெர்விக், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.