20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு; 19வது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்; மைத்திரி

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு, குறைப்பாடுகளை சரி செய்து, 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Srisena) தெரிவித்துள்ளார்.

தனி கட்சி ஒன்றினால், மீண்டும் அரசாங்கத்தை அமைக்க முடியாது. இதனால், திருடர்கள், ஊழல்வாதிகள் இல்லாத புதிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ் விரிவாக தேசிய கொள்கையை உருவாக்கி, புதிய பயணத்திற்கு தலைமை தாங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருக்கின்றது.

பிரதேச சபை முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து இடங்களிலும் திருடர்கள் இருக்கின்றனர். பிரதேச சபைகளில் மணல் அனுமதிப்பத்திரம் மூலம் தரகு பணம் பெறுகின்றனர்.

நாடாளுமன்றத்திற்கு சென்றதும் திட்டங்கள், விலை மனுக்களின் மூலம் தரகு பணம் பெறுகின்றனர்.

அரசாங்கம் சுசில் பிரேமஜயந்தவுக்கு கிரிக்கெட் போட்டியில் போன்று ஒரு பந்தில் 6 ஓட்டங்களை எடுத்தது போல் செய்துள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளை கிரான்ட் மவுண்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.