யாழில் நடந்த சோகம்! பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி!

யாழ் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கசூரினா கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில், தில்லையம்பதி பகுதியை 17 வயதான யோகராசா லோகீஸ்வரன் என்ற மாணவனே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார். இவர் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஆவார்.

கோண்டாவிலிருந்து, புத்தாண்டு தினமான நேற்றைய தினம் சனிக்கிழமை 20 பேர் காரைநகர் கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதனை கண்ணுற்ற ஏனையவர்கள் அவலக்குரல் எழுப்பியதை அடுத்து அங்கிருந்தவர்கள் ஒருவரை மீட்டனர். மற்றையவர் கடலில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவரைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர். எனினும் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.