கொரோனோ தொற்று சந்தேகத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் தொற்று இணங்காணப்படாது விட்டால் அவர்கள் வரும் 6ஆம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர் கூறுகையில் ‘உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கமைய யாழ். மாவட்டத்திலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகல் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.இதற்கமைய யாழ். அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் உட்பட யாழ். மாவட்டத்தில் 319 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் இதுவரை கொரோனோ தொற்று இனங்காணப்படவில்லை.ஆனாலும் தனிமைப்படுத்தும் காலம் முடிவடையும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். ஆகவே அந்தக் காலத்திற்குள் அவர்களுக்கு தொற்று ஏதும் காணப்படாதவிடத்து எதிர்வரும் 6 ஆம் திகதி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்’ எனவும்வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.