இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி.

இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா தெரிவித்துள்ளார்.நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சேதன உர இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாக சந்தன லொகுஹேவா தெரிவித்துள்ளார்.

பழங்கள் மற்றும் மலர் செய்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக்தொன் கலப்பு உரம் தேவை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், 913 மெட்ரிக்தொன் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேதன திரவ உரத்தை உரிய முறையில் பயன்படுத்தாமல், அதற்கு பதிலாக உரங்களை பொதுவெளியில் அழிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கவுள்ளதாக சந்தன லொகுஹேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதற்கு ஒப்பானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரமான திரவ உரங்கள் வழங்கப்பட்ட போதிலும், இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுர் திரவ உரமானது தொழில்நுட்பக் குழுவினால் ஆய்வகங்களில் மதிப்பீடு செய்யப்பட்டு அரசினால் கொள்வனவு செய்யப்பட்டு கமநலச் சேவைகள் திணைக்களத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் உரங்களை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த, உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா, விவசாயிகளுக்கு சேதன உரத்தில் நம்பிக்கை இல்லை என்றால் உர கையிருப்புகளை மீள ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.