பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது சுலபமானதல்ல-மஹிந்த அமரவீர

பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவது சுலபமானதல்ல என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் உலக அளவில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது எனவும், இதனால் வரியை குறைத்தாலும் பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கொள்வனவு செய்த பொருட் தொகுதிகளுக்கு தற்பொழுது இரட்டிப்பு விலை கொடுக்க நேரிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் குறித்து ஜனாதிபதியிடமும், அமைச்சரவையிடமும் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு தற்போதைக்கு எதனையும் செய்ய முடியாது எனவும், உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலம் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உரப் பிரச்சினை, காலநிலை காரணிகள் என்பனவற்றினால் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரத்தை இறக்குமதி செய்வதில் ஏதேனும் மோசடி இடம்பெற்றிருந்தால் அதனை கண்டறிந்து தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தாம் கோரியுள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.