இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்!

நாட்டில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் இருந்து, இலங்கைக்கு வந்தவர்கள் மூலமே மலேரியா நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய மலேரியா ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 24 மலேரியா நோயாளர்கள் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர், ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்களாவர். இலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட மலேரியா நோயாளர், யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியாக மலேரியா நோயாளர் அடையாளம் காணப்பட்டிருந்ததாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆறு ஆண்டுகளின் பின்னர், யாழ்ப்பாணத்தில் இரண்டு மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆபிரிக்காவில் இருந்து கடந்த 8ஆம் திகதி நாடுதிரும்பிய சண்டிலிப்பாய் – ஆணைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவருக்கு மலேரியா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக கடந்த 23ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞனுக்கு மலேரியா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேநேரம், அதற்கு முதல் வாரத்தில், ஆபிரிக்காவில் இருந்து நாடுதிரும்பிய தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் மலேரியா தொற்று உறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்படுவதென்பது, மீண்டும் மலேரியா நோய் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்புத் இயக்கத்தின் பணிப்பாளர், விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடுகளில்தான் மிக அபாய நிலை உள்ளது.எனவே, ஜனவரி மாதம் முதல் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்கள், இலவசமாக முன்னெடுக்கப்படும் குருதி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

குறித்த நபர்கள் அருகில் உள்ள பிரதேச மலேரியா அலுவலகம் அல்லது நாரஹேன்பிட்டியில் உள்ள மலேரியா ஒழிப்புத் இயக்கத்தின் தலைமைகத்திற்கு சென்று குருதி பரிசோதனையை மேற்கொள்ளுமாறு விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.