கடும் நெருக்கடியில் இலங்கை – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளிடம் இலங்கை அரசாங்கம் நிதியுதவிக்கான எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் மசாஹிரோ நொஸாகி(Masahiro Nosaki) தெரிவித்துள்ளார்.

அதற்கான கோரிக்கை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதுபற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரவித்தார்.

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், சர்வதேச நாணய நிதியத்தினால் அனைத்து அங்கத்துவ நாடுகளுடனும் குறித்த கால இடைவெளியில் இருதரப்புக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதன்போது பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் ஆராயப்படும்.

அக்கலந்துரையாடல்களின் இறுதியில் அதிகாரிகளால் தயாரிக்கப்படும் அறிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் கையளிக்கப்படும். அதன்படி கடந்த 7 அம் திகதி நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் 4 ஆம் சரத்து தொடர்பில் பேச்சுவார்த்தைகளையும் ஆராய்வுகளையும் முன்னெடுத்திருந்ததுடன் கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை அதன் பணிகளை முடிவிற்குக்கொண்டுவந்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளிடம் நிதியுதவிக்கான கோரிக்கைகள் எதனையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என்று மசாஹிரோ நொஸாகி தெரிவித்துள்ளார்.