போலி வீசாவைப் பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட பெண் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!

போலி இத்தாலிய வீசாவைப் பயன்படுத்தி கட்டார், தோஹா ஊடாக இத்தாலிக்கு செல்ல முற்பட்ட 39 வயதுடைய பெண் ஒருவர் நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை கண்காணிப்பு பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் மாவாவிலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 8.15 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கட்டார் எயார்வேஸ் விமானமான QR-665விமானத்தில் ஏறுவதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில், விமான அனுமதி சீட்டை எடுக்க புறப்படும் முனையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய நடத்தைக்காக குறித்த பெண்ணை கைது செய்த எல்லைக் கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவரது இத்தாலிய விசாவை பரிசோதித்த அதிகாரிகள், அந்த விசா முற்றிலும் போலியானது என்பதை கண்டுபிடித்ததுடன், சந்தேக நபரிடம் மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்