சகல மரக்கறியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும்-இலங்கை பொருளாதார மத்திய நிலையம்.

ஒரு கிலோ மரக்கறியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி(Aruna Shantha Hettiarachchi) தெரிவித்தார்.

நுவரெலியா விசேட பொருளாதார வலயத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருண சாந்த ஹெட்டியாராச்சி, எரிபொருள் விலை அதிகரிப்பினால் மரக்கறி செய்கை பண்ணையில் இருந்து மரக்கறிகளை கொண்டு செல்வது வரை பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

மரக்கறிகளின் விலைகள் மிகவும் உயர்ந்து நுகர்வோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள வேளையில் எரிபொருள் விலை அதிகரிப்பானது நியாயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து நத்தார் காலத்தில் நாளாந்தம் சுமார் 400,000 கிலோ மரக்கறிகள் சந்தைக்கு கொண்டு வந்த நிலையில் தற்போது அது 40,000 கிலோவாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் மகா பருவத்தில் மரக்கறிகளை பயிரிடுவதற்கு விவசாயிகள் தயாராக உள்ள போதிலும், இரசாயன உரம், பூஞ்சைக் கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை சலுகை விலையில் வழங்குவதாக விவசாய அமைச்சு உறுதியளிக்காததால் அவற்றை பயிரிட விவசாயிகள் தயங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.