எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் வெளியானது.

எரிவாயு கொள்கலனின் செறிமானம் மாற்றப்பட்டமையே, எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாகும் என தெரியவந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் ஊடக சந்திப்பில் எரிவாயு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை நிபுணர் குழுவின் தலைவர் சாந்த வல்பலகே இதனைத் தெரிவித்துள்ளார்.

செறிமானம் மாற்றப்பட்டமை மற்றும் அதனால் ஏற்பட்ட சிக்கல் நிலைமை, இந்த வெடிப்பு சம்பவங்களுக்கு காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய செறிமானம் உள்ளடங்கிய ஸ்டிக்கர் பொருத்தப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விடுவிக்கும் செயற்பாடு தாமதமடைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுடன் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நேற்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வர்த்தமானியில் வெளியிட்டு புதிய சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய எரிவாயுவை விநியோகிப்பது தொடர்பில் இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்துமாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு, நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தது.

இதற்கமைய எரிவாயு நிறுவனங்களினால் செறிமானம் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய குறித்த ஸ்டிக்கர்கள்களில் செறிமான அளவு காணப்படவில்லை என எமது செய்தி சேவை முன்னெடுத்த கண்காணிப்பில் தெரியவந்தது.

70 சதவீத பியூட்டேன் மற்றும் 30 சதவீத ப்ரோப்பேன் அளவுடன் கூடிய எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு இன்மையால் எரிவாயு விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.