யாழ் பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல்.

பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சுயாதீன ஊடகவியலாளரின் சகோதரன் தூக்கிலிட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் பிரதமர் அலுவலகத்தினால் மரணம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு யாழ்ப்பாணத்தில் விசேட காவல்துறை குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் விசாரணைக்கென்று நியமிக்கப்பட்ட காவல்துறையினருக்கு குறித்த ஊடகவியலாளர் சாட்சியம் வழங்கியுள்ள நிலையில், நேற்று இரவு அவரது இல்லத்திற்கு அருகில் இனந்தெரியாத நபர்கள் தன்னை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.