தமிழக மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் துன்புறுத்தும் வகையிலான செயற்பாடுகளை தமிழக மீனவர்கள் நிறுத்த வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 43 இந்தியக் கடற்றொழிலாளர்கள் 6 படகுகளுடன் இன்று(20) கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து கடற்றொழில் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியக் கடற்றொழிலாளர்களினால் நாட்டின் கடல் வளம் அழிவடைகின்றமையை இதன்மூலம் தெளிவாக காணமுடிவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு பெருந்தொகையான மீன்வளம் யாருக்கும் பயனற்ற வகையில், நாள்தோறும் அழிக்கப்படுகின்றது. இதனால் இலங்கை மீனவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சட்டவிரோத தொழில் முறையான இழுவை வலை தொழில் முறையைப் பயன்படுத்துவதால், பாக்கு நீரிணை மற்றும் மன்னார் விரிகுடாப் பிரதேசத்தில் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இல்லாமலாக்கப்படுகிறது. இதனால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு மாத்திரமன்றி இந்திய மீனவர்களது எதிர்காலச் சந்ததியின் வாழ்வாதாரமான கடல் வளம் இல்லாத சூழல் உருவாக்கப்படுகின்றது.

ஆகவே இந்த விடயத்தில் இந்தியக் மீனவர்கள் யதார்த்தத்தினைப் புரிந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.