பிரசவத்தை நெருங்கும் பெண்களுக்கான அறிவுரைகள்

பிரசவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்கள், 9-வது மாதம் தொடங்கிய ஓரிரு நாட்களுக்குள் மருத்துவமனைக்குச் செல்லும் வகையில் தயாராக இருப்பது நல்லது.


தனிக்குடித்தனங்கள் பெருகி விட்ட தற்போதைய காலகட்டத்தில், எந்தச் சூழலையும் சமாளிப்பதற்கு கர்ப்பிணிகள் தயாராக இருக்க வேண்டும். வீட்டில் இருந்து மருத்துவமனை அமைந்துள்ள தூரம், பயண நேரம், மருத்துவரின் தொடர்பு எண், மருத்துவரை போனில் தொடர்பு கொள்ளும் நேரம், மருத்துவமனைக்கு வாகனத்தில் செல்வதற்கான சரியான வழித்தடம் உள்ளிட்ட தகவல்களை கர்ப்பிணிகள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

மருத்துவ அறிக்கைகள், துணிமணிகள், தேவையான பணம், காப்பீட்டு அட்டை, மாத்திரைகள் மற்றும் இதுவரை மேற்கொண்ட மருத்துவ பரிசோதனை சான்றுகள் ஆகியவற்றை தேதி வாரியாக, ஒரு பைலில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும்.


காட்டன் நைட்டிகள், சானிட்டரி நாப்கின், பல் துலக்கும் பிரஷ் மற்றும் பற்பசை, பழைய காட்டன் சேலைகள், பிளாஸ்க் ஆகியவற்றை மருத்துவமனைக்குச் செல்லும்போது உடன் கொண்டு செல்லவேண்டும். கர்ப்பிணிகள் அவசியமான ஆபரணங்களை மட்டுமே அணிந்திருக்கலாம். மோதிரம் உள்ளிட்ட கூடுதல் ஆபரணங்களையும், ஸ்மார்ட் போன் வகைகளையும் சில காலம் தவிர்ப்பதே நல்லது.

பிறந்த குழந்தையின் பராமரிப்புக்காக டயாப்பர்கள், உடலை துடைப்பதற்கு ஏற்ற மெல்லிய பருத்தி துணிகள், கொசுவலை, குழந்தைக்கு அணிவிப்பதற்கான பருத்தி ஆடைகள், பேபி பவுடர் ஆகியவற்றையும் மருத்துவமனைக்குச் செல்லும்போது எடுத்துச்செல்ல வேண்டும்.

9-வது மாதம் தொடங்கியவுடன் கர்ப்பிணிகளுக்கு உதவியாகவும், துணையாகவும் உறவினரோ அல்லது நம்பிக்கைக்கு உரிய பெண்மணியோ எப்போதும் உடன் இருக்க வேண்டும். அதற்காக ஒரு தற்காலிகப் பணியாளரைக்கூட அமர்த்திக்கொள்ளலாம்.
மருத்துவமனைக்கு சென்ற பின்னர் வீட்டை கவனிக்கவும், வீட்டில் இருந்து தேவையான பொருட்களை மருத்துவமனைக்கு எடுத்து வந்து தருவதற்காகவும் அவரது உதவி தேவையாக இருக்கும்.

பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் சமயத்தில், திட உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு செல்லக்கூடாது. பசியாக இருந்தால் பால், கஞ்சி போன்ற திரவ உணவு வகைகளை கொஞ்சமாக சாப்பிடலாம்.

தற்போது பேபி சேப்டி கிட், மதர்ஸ் கிட் என்ற பெயர்களில் அன்னையும், குழந்தையும் பிரசவத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான ரெடிமேடு பொருட்கள் அடங்கிய பைகள் மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அவசர பயன்பாட்டுக்கு அவற்றை வாங்கியும் பயன்படுத்திக்கொள்ளலாம்.