மின் தூக்கி உடைந்து வீழ்ந்து யுவதி பலி – ஒருவர் பலத்த காயம்.

கண்டி, பிலிமத்தலாவ பிரதேசத்தில் 3 மாடிகளைக் கொண்ட தொழிற்சாலையொன்றில், மின்தூக்கி (லிஃப்ட்) உடைந்து வீழ்ந்ததில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொலித்தீன் மற்றும் உரப்பை தயாரிக்கும் மேற்படி நிறுவனத்தின் 3 ஆவது மாடியிலிருந்து நேற்று(18) மாலை மின் தூக்கிக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது, மின்தூக்கி உடைந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், குறித்த மின் தூக்கியில் பயணித்திருந்த  மற்றுமொரு பெண் பலத்த காயமடைந்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெகித, பலன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான யுவதியொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கடுகண்ணாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.