வேம்படுகேணி பிரதேசத்தில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் வீடுகளை நோக்கி படையெடுக்கும் முதலைகள் !

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வேம்படுகேணி பிரதேசத்தில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

 

குறித்த பிரதேசத்திற்கு வேறு பிரதேசங்களில் இருந்து வரும் வெள்ளநீர் தமது கிராமத்தில் தேங்கி நிற்பதாகவும் குறித்த நீர் வெளியேற வடிகால் ஒன்று அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் முதலைகள் வீடுகளை நோக்கி வருகின்றன. இதனால் எமது பிள்ளைகளுக்கும் எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை, அச்சத்துடனேயே வாழ்கின்றோம். பிள்ளைகள் பாடசாலை செல்ல பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் பிரதேச சபை உள்ளிட்ட அரச காரியாலயங்களுக்கு தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.