லிட்ரோ எரிவாயு விநியோக நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பம்.

தமது எரிவாயு விநியோக நடவடிக்கைகள் இன்று(18) முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு கப்பலில் அடங்கியுள்ள திரவ பெற்றோலிய எரிவாயுவுக்கு, நுகர்வோர் விவகார அதிகார சபையும், இலங்கை தரநிர்ணய நிறுவகமும் அனுமதி வழங்கிய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள், கெரவலப்பிட்டி லிட்ரோ எரிவாயு முனையத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன.

அவற்றில் அடங்கியுள்ள எரிவாயுவுக்கு, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவகம் என்பனவற்றின் அனுமதியை எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்கப்பெற்றதும், அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்மூலம், நாடுமுழுவதும் லிட்ரோ எரிவாயு நிரப்பல் மற்றும் விநியோகம் என்பனவற்றை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விற்பனை மற்றும் விநியோக பணிப்பாளர் ஜானக பத்திரண தெரிவித்துள்ளார்.

உரிய தரமற்றது எனக் கூறப்பட்ட இரண்டு லிட்ரோ எரிவாயு கப்பல்களில், ஒரு கப்பலுக்குச் சென்று நடத்திய பரிசோதனைகளின் பின்னர், அதில் பிரச்சினை இல்லையெனத் தெரிவித்து, அந்தக் கப்பலில் இருந்து எரிவாயுவை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா நேற்று தெரிவித்திருந்தார்.


குறித்த பணிகளை தொடர்புபடுத்துவதற்காக நேற்று முன்தினம் ஜனாதிபதியினால் தாம் நியமிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிவாயு பிரச்சினை தொடர்பில் ‘லிட்ரோவை பாதுகாக்கும் அமைப்பு’ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளது.

அதன் பின்னர், எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் செயலாளர் டெரன்ஸ் அப்புஹாமி, தாங்கள் செறிமானத்தை மாற்றவில்லை எனத் தெரிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் மாதத்தில், ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் மாற்றப்பட்டது. 50 க்கு 50 என்ற அடிப்படையில் 1,500 டன் மாத்திரமே கொண்டுவரப்பட்டது. அதாவது, இந்தக் காலப்பகுதியில், ரெகியூலேட்டரிலோ, கொள்கலனிலோ எந்தவித மாற்றமும் இடம்பெறவில்லை.ஆனால் வெடிக்கிறது. எங்களுக்கு இதில் பாரிய சந்தேகம் உள்ளது.

இதனை மக்களுக்கு விநியோகிக்குமாறு, கடந்த வெள்ளிக்கிழமை வந்த கப்பலுக்கு, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்றுதான் அனுமதி கிடைத்தது.
எனவே இது குறித்து ஆராயுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாங்கள் கோரியதாக லிட்ரோவை பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் டெரன்ஸ் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.