பருத்தித்துறையில் மாணவனை 200 தோப்பு கரணம் போடவைத்து துன்புறுத்திய சம்பவம்! 3 பேர் கொண்ட விசாரணை குழு நியமனம்!

யாழ்.பருத்தித்துறை – புற்றளை மகா வித்தியாலயத்தில் 6ம் வகுப்பு மாணவனை 200 தோப்பு கரணம் போடவைத்து துன்புறுத்திய ஆசிரியர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

வடமாகாண கல்வி திணைக்களம் 3 பேர் கொண்ட குறித்த விசாரணை குழுவினை நியமித்திருக்கின்றது. குறித்த பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தரம் 6ல் கல்வி கற்கும் மாணவனை

200 தோப்பு கரணங்கள் போடுமாறு கூறி துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் பாடசாலைக்கு சென்று விசாரித்தபோது குறித்த மாணவனை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்கும்படியும், அதற்கான செலவை தாங்கள் ஏற்பதாகவும் பாடசாலை அதிபர் பேரம் பேசியுள்ளார். இந்நிலையில் குறித்த  மாணவன் நேற்று பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.