யாழ்.வலி,வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி அனுமதி.

யாழ்.வலி,வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியிருக்கின்றார்.

கடந்த வாரம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் யாழ்.வலி,வடக்கு மக்களின் விவசாய காணிகளில் விவசாயம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதாகத் தெரிவித்த நிலையில்

அனுமதி வழங்கப்படவில்லை என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன் வைத்தேன். இதன்போது பதிலளித்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்புத் தரப்பினருக்கு அவசியம் எனக் கருதப்படும் தனியார் காணிகளை அடையாளப்படுத்தி தற்போது நடைமுறையில் உள்ள விலை மதிப்புக்கு ஏற்ற வகையில்

காணிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் ஏனைய தனியார் காணிகளில் விவசாயம் செய்வதற்கு முதலில் மக்களுக்கு அரசாங்கம் இடமளிக்கும் . குறித்த விடயம்  தொடர்பில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கூட்டத்தின்போது ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக அங்கயன் மேலும் தெரிவித்தார்.