மலேசியாவில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து! 11 பேர் பலி; 25 பேர் மாயம்

மலேசியாவின் தென் பகுதியின், ஜோகர் மாகாணத்தில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்தில் சிக்கியதில் 11 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெண்கள், சிறுவர்கள் உட்பட 60 பேருடன் பயணித்த குறித்த படகு எதிர்பாராத வகையில் திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் மூழ்கியுள்ளனர்.

தகவலறிந்த மலேசிய கடலோர காவல் படையினர் மீட்பு படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதுடன், 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விபத்தில் 25 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.