இளைஞன் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணியைச் சேர்ந்த சியானீஸ் மதுசன் என்ற 21 வயது இளைஞனின் உயரிய செயற்பாட்டால் இன்றைய தினம் வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

கடந்த 9ஆம் திகதி சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதி வாய்ந்த தாலி கொடி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அடங்கிய கைப்பையை பேருந்து நிலையத்திலிருந்து கண்டெடுத்து அதன் உரிமையாளரின் அறிவிருத்தலுக்கமைய உறவினர் ஒருவரிடம் நேரில் சென்று ஒப்படைத்துள்ளார்.

குறித்த இளைஞனின் செயலை கௌரவிற்கும் வகையில் இன்று வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இளைஞனுக்கு பொன்னாடை போர்த்தி அவரை பாராட்டி வாழ்த்துமடல் ஒன்றையும் வழங்கி கெளரவித்தார்.

அத்துடன் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சி.பிரபாகரன் குறித்த இளைஞனுக்கு சந்தன மாலை அணிவித்து கெளரவித்தார். அத்தோடு குலானந்த குளத்து முருகமூர்த்தி ஆலய நிர்வாக சபைத்தலைவர் குணரத்தினமும் இளைஞனுக்கும் அவரது தாயாருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

குறித்த நிகழ்வில் ஆலய குரு, வரணிப் பகுதி பாடாசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு இளைஞனை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.