சீனா, இலங்கை தூதுவர் கீ சென் ஹொங் வட மாகாணத்திற்கு விஜயம் !

இலங்கையில் உள்ள சிறுபான்மைச் சமூகங்கள், சீனா மற்றும் இந்தியாவின் உதவிகளினால் நன்மை அடைய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும், இதில் எந்தவித போட்டியும் இல்லை எனவும் சீன தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்துள்ளார்.,வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தூதுவர், 15.12.21 அன்று யாழ்ப்பாணத்திற்கு பயணித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவின் அதானி நிறு வனம் யாழ்ப்பாணத்தில் முதலீடுகள் செய்வது குறித்து பரிசீலித்துவருவது குறித்து ஊடகவியலாளர்கள் வினவிய போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர், ”வடக்கிற்கான விஜயம் என்பது திடீர் முடிவல்ல. மாறாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட போதிலும் கொரோனா காரணமாக அது இதுவரை தடைப்பட்டிருந்தது.தற்போது வருகை தந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. எதிர்வரும் காலத்தில் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன்.

சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், ஆசியாவில் மிகப் பெரிய நாடுகள். இந்தியா எமது அயல் நாடு. நாம் உலகில் வலுவான பொருளாதாரம் உள்ள நாடுகள். இந்தியாவும், சீனாவும் நல்ல நண்பர்கள், நல்ல பங்காளிகள், சிறந்த அயலவர்கள். ஆனால், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட நட்புறவு நிலவுகின்றது.

இந்தியா, சீனா, இலங்கை என்பது முக்கியமல்ல மாறாக நன்மைகளைப் பெற்றுக்கொள்வதே சிறந்தது. வடக்கில் உத்தேசித்துள்ள எரிசக்தி திட்டமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டமாகும். அது தொடர்பான உடன்படிக்கைகளும், அது சம்பந்தமான தரப்பினரும் வெளிப்படைத்தமையானது. ஆகவே அது தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு ஒன்றுமில்லை” எனக் கூறினார். இதேவேளை, சீனத் துாதுவர் நாளை மன்னாரிற்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.