கொழும்பு மாநகரம் உட்பட நாட்டின் பல இடங்களிலும் அடைமழை..!! பொதுமக்கள் பெரும் அசௌகரியம்..!!

கொழும்பு உட்பட பல பகுதிகளில் பெய்து வரும் அடைமழை காரணமாக வீதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மணித்தியாலங்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக வீதிகள் பல மூழ்கியுள்ளன.தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, அடுத்து வரும் நாட்களுக்கு மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அடுத்து வரும் சில நாட்களில் நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரித்து காணப்படும்.நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென், மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.