மிளகின் ஆரோக்கிய பயன்கள்; வாங்க அறிந்து கொள்வோம்

மிளகு ‘கறுப்பு தங்கம்’ என்று அழைக்கபடுகிறது. மிளகின் நன்மைகளை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. சமையலில் மட்டும் அல்லாமல், மருத்துவத்திலும் இதன் பயன்பாடு அதிகம் உள்ளது. நம் நாட்டு உணவுகளில் மட்டும் அல்லாமல், உலகில் பெரும்பாலும் சமைக்கக் கூடிய அனைத்து உணவுகளிலும் மிளகு முக்கிய பொருளாக இடம் பெற்றிருக்கிறது.  மிளகு சமையலுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் தருகின்றது.

மிளகு பைப்பரேசியே‘ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தபூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையை சேர்ந்த ஒரு செடியாகும். மிளகு செடியின் கொடியில் கனிகள் காய்ந்தவுடன் சிறந்த நறுமணத்தை பரப்பும். பின்பு கனிகள் பறிக்கபட்டு காய வைத்து பயன்படுத்தபடுகிறது. மிளகின் கொடிஇலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும். உலகிலேயே கேரள மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது.

மிளகில் கருமிளகு மற்றும் வால் மிளகு என முக்கியமான இரு வகைகள் உண்டு. மிளகின் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவிற்கு சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில், அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகிற்க்கு குறுமிளகு மற்றும் கோளகம் என்ற பெயர்களும் உண்டு.

மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் உருவாகிறது. பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் அனைத்து நாடுகளின், சமையலறைகளிலும காணலாம்.

மிளகின் ஆரோக்கிய குணங்கள்

செரிமான உறுப்புகளின் செயல்திறனை கூடும்

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.

நஞ்சை முறிக்கும்

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்பது பழமொழி. உணவில் உள்ள விஷத்தை முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு.

செரிமானத்திற்கு உதவி புரிகிறது

மிளகு உடலின் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும், மிளகு நல்ல தீர்வாக அமைகிறது.

அறிவாற்றல் அதிகரிக்கிறது

மிளகில் இருக்கும் பெப்பரைன் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மேலும் மூளை நல்ல செயல்திறனை பெற்று வயதாகாமல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகின்றது. இதன் விளைவாக அல்சைமர், பார்கின்சன் நோய் மற்றும் முதுமை அடைதல் போன்றவை தடுக்கப்படுகிறது.

இரத்த கொதிப்பை குறைக்கும்

மிளகில் இருக்கும் பெப்பரைன் என்ற பொருள் இரத்த கொதிப்பை சீரான அளவில் வைத்திருக்க உதவும். மேலும் பெப்பரைன் மஞ்சளில் இருக்கும் குர்குமின் போன்ற பொருட்களை உடலுக்குத் தேவைப்படும் அளவு எடுத்துக் கொள்ளும் பண்பை கொண்டதால், நல்ல பலங்கள் உடல் பெற உதவுகின்றது.

சளி இருமலை போக்கும்

5000 ஆண்டுகளுக்கு முன்பே மிளகு பல உடல் நல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது என முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைக்கு உடனடி தீர்வு பெற மிளகு உதவுகின்றது. மிளகுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளும் போது இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கின்றது.

நெஞ்சு சளி நீங்கும்

மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சு சளி கட்டுதல் நீங்கும்.