மஹேல ஜெயவர்தனவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் முக்கிய பொறுப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

2022 ஜனவரி 1ம் திகதி முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளராக ஜெயவர்தன தனது பணியை தொடங்குவார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஜெயவர்தன, ஒரு வருட காலத்திற்கு அணியின் ஆலோசகர் பயிற்சியாளராக செயல்படவிருக்கிறார்.

இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா கூறியதாவது, ஆலோசகர் பயிற்சியாளராக மஹேல தேசிய அணியில் இணைவிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்றில் மஹேலாவின் பங்களிப்பு, அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு விலைமதிப்பற்றதாக இருந்தது.

புதிய நியமனம் இருந்தபோதிலும், அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், ஜெயவர்தன 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணிக்கு தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்குவார் என ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்ற இது ஒரு அற்புதமான வாய்ப்பு. தேசிய பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் அணியை ஆதரிப்பதில் எனது முக்கிய பங்கு இருக்கும் என மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.