பீற்றர் இளஞ்செழியன் மீது கடும் தாக்குதல்; சந்தேக நபர்கள் காவல்துறையின் துணையுடன் நடமாடுவதாக குற்றச்சாட்டு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களில் ஒருவருமான பீற்றர் இளஞ்செழியன், தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்றைய தினம்  மாலை முல்லைத்தீவு மணற்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இச் சம்பவத்தில் முகத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தாடை எலும்பு முறிந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பீற்றர் இளஞ்செழியன் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அவரது சகோதரனின் காணிக்குள் இரு பெண்களும் ஒரு ஆணும் மாடு ஒன்றை பிடித்து வந்து கட்டியுள்ளனர். அந்த மாட்டினை அங்கிருந்து அகற்றுமாறு பீற்றர் இளஞ்செழியன் கோரியபோது அங்கிருந்து ஒரு பெண் தனது மகளின் கணவரையும் வரவழைத்து ஹெல்மட் மற்றும் பொல்லுகளினால் இவர்மீது தாக்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பீற்றர் இளஞ்செழியனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியயசாலைக்கு அனுப்பிவைக்க உதவியுள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் மூன்று காவல்துறையினர் சிவில் உடையில் நிற்கும் போதே இந்த தாக்குதல் நடந்திருக்கும் நிலையில் இந்த தாக்குதலின் பின்னணி என்ன? தற்போது வரை தாக்கிய மூவரும் காவல்துறையினரால் கைது செயப்படவில்லை.

இத்தாக்குதலில் சூழ்ச்சி ஏதும் உண்டா காவல்துறையினரின் அசமந்த போக்குக்கு காரணம் என்ன ..? அல்லது இது திட்டமிடப்பட்ட சதியா ..? இதற்கு தீர்வு கிடைக்குமா என அவரது மனைவி, கேள்வி ஏழுப்பியுள்ளார்.