பாவனைக்கு தகுதியற்ற பெருமளவான சீனிமூடைகள் மீட்பு !

மாத்தளை – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான களஞ்சியசாலை ஒன்றில் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத வகையிலான சீனி மூடைகளை மீட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாவனைக்கு தகுதியற்ற சீனி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஊழியர் ஒருவர் தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாதவிடம் (Jaliya Opatha) தெரிவித்தார். இது தொடர்பில் தம்புள்ளை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த சீனி மூடைகளை மீட்டுள்ளனர்.

எந்தவொரு சுகாதார நடைமுறைகளும் இன்றி சீனி நிலத்தில் கொட்டப்பட்டு பின்னர் மீண்டும் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை காலங்களில் நாடு முழுவதிலும் உள்ள நுகர்வோருக்கு இந்த சீனியை விற்பனை செய்யும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் மேயர்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சீனி கையிருப்பு தொடர்பில் தம்புள்ளை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.