சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

இலங்கையில் டெங்கு நோயினால் அதிகளவான சிறுவர்கள் பாதிக்கப்படலாம் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்பதனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டெங்கு நோய் அதிக ஆபத்துள்ள 59 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது 10 சதவீதம் டெங்கு நுளம்பு பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

40 சதவீதம் அழியாத கழிவுகளாகவும், 20 சதவீதம் நீர் சேகரிக்கும் இடங்களிலுமே இவ்வாறு டெங்கு தொற்று பரவும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, 25,910 டெங்கு நோயாளிகள் மற்றும் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன. கட்டுமானத் தளங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் கூட டெங்கு கொசுக்கள் பெருகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.