பொது மக்கள் அசட்டையீனம்! எச்சரிக்கையுடன் வந்த அறிவுறுத்தல்

பொது மக்கள் அநாவசிய ஒன்று கூடல்களுடன் பண்டிகைகளை கொண்டாடுவதற்கு முயற்சித்தால், 2022ஆம் ஆண்டையும் கொவிட் பரவலுடனேயே கடக்க வேண்டியேற்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண(Upul Rohana)  தெரிவித்துள்ளார்.

தற்போது ஊடகங்களில் வெளியிடப்படும் எண்ணிக்கையை விட சமூகத்தில் அதிக தொற்றாளர்கள் காணப்படுவதாக அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும், பல சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட நிலைமையை மீண்டும் உருவாகும் வகையிலேயே பொது மக்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போதைய பண்டிகைக் காலத்தை மக்கள் பழைய முறைப்படியே கொண்டாடுவதற்கு முயற்சிப்பதாகவும், தற்போதும் பொது சுகாதார பரிசோதகர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், சமூகத்தின் பல பகுதிகளிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாளாந்தம் ஊடகங்களில் வெளியிடப்படும் தரவுகளை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு , நிலைமை மோசமடையவில்லை என கற்பனை செய்ய வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார். அதனை விட மோசமான நிலைமை சமூகத்தில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது மக்கள் அநாவசிய ஒன்று கூடல்களுடன் பண்டிகைகளை கொண்டாடுவதற்கு முயற்சித்தால் , 2022ஆம் ஆண்டையும் கொவிட் பரவலுடனேயே கடக்க வேண்டியேற்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரசாங்கத்தினால் அல்லது சுகாதார தரப்பினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் , விதிக்கப்படாவிட்டாலும் மக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் செயற்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

அவ்வாறில்லை என்றால் பண்டிகைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களில் அல்லது கொவிட் சிகிச்சை நிலையங்களிலேயே கொண்டாட வேண்டியேற்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார்