வடக்கில் போக்குவரத்துச் சேவைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வடக்கு ஆளுனர் வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு..!!

பொதுமக்களுக்கான அரச, தனியார் பேருந்து சேவைகள் வடமாகாண கொரோனா நிலைமைகள் தொடர்பான அவதானிப்பை அடுத்தே தீர்மானிக்க முடியும் என்று வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். அத்துடன் வட மாகாணத்தில் ஊழியர்களுக்காக இலங்கை போக்குவரத்து சேவைக்குச் சொந்தமான பேருந்துகளை இரண்டு வாரங்களுக்கு பின்னரே மீள இயக்கும் செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் மீளாய்வுக்கூட்டம் ஆளுநர் செயலகத்தில்  12ஆம் திகதி நடைபெற்றது. ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம செயலாளர், அமைச்சின் செயலாளர்கள் மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.இதன்போது பணிப்பாளர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் திணைக்களங்களின் தற்போதைய நிலைமைகளை வெளிப்படுத்தியதோடு, தமது திணைக்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பத்தில் உள்ள சவால்களையும் முன்வைத்தனர்.அத்துடன் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு அமுலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக தொழிலதிபர் நோயல் செல்வநாயகம் வழங்கிய 2 மில்லியன் ரூபா காசோலையை கிராமிய அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரதம செயலாளரிடத்தில் ஆளுநர் கையளித்தார்.அதனையடுத்து, வடமாகாண ஆளுநர் கருத்து வெளியிடும் போது;

வடமாகாணத்தின் வளர்ச்சி தொடர்பான தனது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தினார். மாகாணத்தின் திணைக்களங்களில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகள் தொடர்பில் அந்தந்த திணைக்களத்தின் பணிப்பாளர்கள் அதற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.மேலும், மாகாணத்தின் அனைத்து திணைக்களங்களிலும் சீரான தன்மையை பின்பற்றுமாறு பரிந்துரைப்பதோடு வளங்கள் மற்றும் வசதிகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்கு பதிலாக, தற்போது காணப்படுகின்ற வளங்களையும், வசதிகளையும் வினைதிறனான முறையில் பயன்படுத்த வேண்டும்.கொரோனா வைரஸ் பரவல் நிறைவுக்கு வந்ததையடுத்த இரண்டு மாதங்களில் ஏற்படவுள்ள உண்மையான சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையிலான முகாமைத்துவ திட்டங்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.அத்துடன் முகாமைத்துவ திட்டங்களை தயாரிப்பதற்கும் தீர்வுகளை காணப்பதற்குமான ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். திணைக்களங்கள் எதிர்காலத்தில் எந்தவிதமான குழப்பங்களுமின்றி செயற்படுவதற்குரிய பதிவுகளையும், முறைப்படியான பூரணப்படுத்தல்களையும் மேற்கொள்ள வேண்டும்.வடமாகாணத்தின் வளர்ச்சியானது அதிகளவில் கல்வியிலேயே தங்கியுள்ளது என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஆகவே சமூகத்தின் கோரிக்கைகளுக்கு அமைவாக கல்வித்தரம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் மாகாணத்தின் கல்வி வளங்களுக்கான தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.மாகாணத்தில் கைவிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத நிலங்களை முழுமையாக அளவீட்டுக்கு உட்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதரத்தினை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு உரிய அலகுகள் ஊடாக விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தற்காலிகமாக வழங்கப்பட வேண்டும்.மேலும், மாகாணத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வகையில் அமைச்சுக்களுக்கு கிடைக்க கூடிய உரிமைகளை முறையாக அதிகாரிகள் பயன்படுத்தி செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.