தமிழ் மக்கள் எதிரிகள் அல்ல – அரசுக்கு புரிதல் அவசியம் என்கிறார் கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் தமது உரிமைகளையே கேட்கின்றனர் – இதனை அரசாங்கம் புரிந்து செயற்படாவிட்டால் ஒருபோதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்கிறார் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam).

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடிவதுடன், அரசாங்கம் எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் எனக் கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

”யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்கும் வரையும், அதிலிருந்து தப்பலாம் என்ற எண்ணத்துடன் செயற்படும் வரையும், நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது.

நாடு முழுவதிலும் அனைவருக்கும் பாதுகாப்பு என்ற நிலை இல்லாவிட்டால், அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

மிக முக்கியமாக மக்களைப் பிரித்து இனவாதம் மூலம், வாக்குகளுக்காக செயற்படும் நிலை மாற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.