சொக்கன் கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த இளைஞர் அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு

நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியில் உள்ள சொக்கன் கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்தவர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சொக்கன் கடைக்குள் புகுந்த குறித்த இளைஞன் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை காண்பித்து , பணம் கேட்டுள்ளார்.

அதன்போது , அங்கிருந்தவர்கள் இளைஞனை மடக்கி பிடித்து கத்தியையும் பறிமுதல் செய்த பின்னர் , இளைஞனை தடுத்து வைத்து பொலிஸாருக்கு அறிவித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த இளைஞன் முன்னதாக இன்றைய தினம் காலை, அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் உள்ள புத்தக கடைக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அதனையடுத்து பெண் கூக்குரல் எழுப்ப அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னரே சொக்கன் கடைக்குள் புகுந்தும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.