இலங்கையில் மீண்டும் முடக்கம் அமுலாகலாம்!

இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால் இவ்வாறு முடக்கம் ஒன்றை அமுல்படுத்த அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அந்த செய்தியில் கூறுப்பட்டுள்ளது.

இதன்படி டிசெம்பர் 23ம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை சுகாதார கட்டுப்பாடுகளுடன் முடக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல் மற்றும் இரண்டாவது கோவிட்  அலையை தொடர்ந்து நாடு மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், கடந்த சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் புத்தாண்டு கொத்தணி உருவாகியது.

இதனையடுத்து இலங்கையில் கோவிட் தொற்று மிக வேகமாக பரவியதுடன், லட்சக்கணக்கானவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்தது.இந்நிலையிலேயே, இலங்கையில் மீண்டும் கோவிட் அலை ஏற்படாமல் இருக்க இவ்வாறு முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.