2018 இல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்…மன்னிப்புக்கோரியது பேஸ்புக் நிறுவனம்..!

இலங்கையில் 2018 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் தான் வகித்த பங்கிற்காக மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெறுப்புணர்வு பேச்சுக்கள் மற்றும் வதந்திகள் பரவியமை விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டதாக தெரிய வந்துள்ளதையடுத்து இதற்காக மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.இவ் வன்முறைகள் நடந்து 2 வருடங்கள் கடந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோாியுள்ளது.மேற்படி வன்முறைகளின் போது , முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், இலங்கை அரசாங்கம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதுடன் பேஸ்புக் பாவனைக்கு தடை விதித்திருந்தது.மேற்படி வன்முறைகளில் பேஸ்புக் வகித்திருக்கக்கூடிய பாத்திரம் குறித்து பேஸ்புக் நிறுவனம் விசாரணை நடத்தியது.இவ்விசாரணைகளை நடத்தியவர்கள் பேஸ்புக்கில் வெயிடப்பட்ட சில விடயங்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழி வகுத்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.இந்தோனேசியா மற்றும் கம்போடியாவில் மனித உரிமைகள் மீதான தாக்கம் குறித்த ஏனைய சுயாதீன மதிப்பீடுகளுடன், அடையாளப்படுத்தப்பட்ட சாராம்சத்தை நேற்றையதினம் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டது.அதிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ப்ளூம்பேர்க் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.எமது பேஸ்புக் தளத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்காக நாம் வருந்துகிறோம். இதன் விளைவாக ஏற்பட்ட உண்மையான மனித உரிமைத் தாக்கங்களை நாம் ஏற்றுக்கொள்வதுடன், இதற்காக வருந்துகிறோம் எனத் தெரிவித்துள்ளது.பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோருவது இது முதல் தடவையல்ல என்பதோடு, அண்மையில் வெளியான அறிக்கைகள், மியான்மாரில் ஏற்பட்ட கலவரத்திற்கும் அதன் செயற்பாடு தொடர்பான மதிப்பீடு காரணமாக அமைவதாக தெரிவிக்கின்றது.