இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தீயில் கருகி பலி!

ஆனமடுவ – சிலாபம் வீதியில் சங்கட்டிக்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ முதலக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதான ராஜகருணா ஹேரத் முதியன்சேலாகே ரன்பண்டார என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வன்னி ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே விபத்தில் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் ஸ்தலத்திலேயே தீப்பற்றி எரிந்தது.

இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் துரதிஷ்டவசமாக மோட்டார் சைக்கிளில் சிக்கி விபத்துக்குள்ளானதாகவும், திடீர் தீயினால் அவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.